முழு நேர களப்பணியாளர் உஞ்சை அரசன் மறைவு! வைகோ இரங்கல்
முழு நேர களப்பணியாளர் உஞ்சை அரசன் மறைவு!
வைகோ இரங்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் கவிஞர் உஞ்சை அரசன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு, ஆறா துயர் அடைந்தேன்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள உஞ்சைவிடுதி எனும் சிற்றூரில் ஆசிரியராக அரசுப் பணியில் ஈடுபட்டு, பணி நிறைவுக்கு முன்பாகவே விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முழு நேர களப் பணியாளராக உஞ்சை அரசன் தொண்டாற்றினார்.
தலித் பண்பாட்டுப் பேரவை, தமிழக தாழ்த்தப்பட்டோர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் வாயிலாகவும் உஞ்சை அரசன் சமூக நீதிக்காகப் போராடினார். மனுசங்க என்ற திங்கள் இதழும், எகிரு என்ற சிறுகதைத் தொகுப்பும் உஞ்சை அரசன் அவர்களின் எழுத்தாற்றலை உலகுக்குப் பறைசாற்றியது.
கடந்த 20 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சிக்கு இவர் பாடுபட்டாலும், அந்தக் கட்சியின் மகளிர் அணியைக் கட்டமைப்பதிலும், மகளிர் மாநாடுகளை நடத்துவதிலும் இவர் மிகச் சிறப்பாக பாடுபட்டார்.
உஞ்சை அரசன் அவர்களின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் அனைவருக்கும் பேரிழப்பாகும். இவரது பிரிவால் துயரத்தில் இருக்கும் இவரின் வாழ்க்கைத் துணைவியார் மற்றும் குடும்பத்தினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன், அந்தக் கட்சியின் தோழர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
25.10.2023