முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட இயக்கக் கோட்பாட்டின் வெற்றிக்கு வழி வகுக்கும் வரவு -செலவு திட்டம்! வைகோ பாராட்டு

எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட இயக்கக் கோட்பாட்டின் வெற்றிக்கு வழி வகுக்கும் வரவு -செலவு திட்டம்! வைகோ பாராட்டு

February 19, 2024 by Admin in அறிக்கைகள்

எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட இயக்கக் கோட்பாட்டின் வெற்றிக்கு வழி வகுக்கும் வரவு -செலவு திட்டம்!

வைகோ பாராட்டு

மாபெரும் தமிழ் கனவுடன் தமிழ்நாடு அரசின் 2024- 25 நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்திருக்கிறார்.

சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் மற்றும் தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை வழங்கி இருக்கிற நிதி அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார பலம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இயற்கைப் பேரிடர், ஒன்றிய அரசின் பாராமுகம், நிதி நெருக்கடி, வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ஒன்றிய அரசின் கடும் நிபந்தனைகள், ஜிஎஸ்டி வரி வருவாயில் ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி இழப்பு, வருவாய் பற்றாக்குறை ரூபாய் 44 ஆயிரத்து 907 கோடி அளவுக்கு உயர்வு, நிதிப் பற்றாக்குறை ரூபாய் 94060 கோடியாக அதிகரிப்பு போன்ற கடுமையான சூழ்நிலையிலும் திறன் மிக்க நிதி மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசை பாராட்டி வாழ்த்துகிறேன்.

சமூக நீதிக்கு அடித்தளமாக, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

வேளாண் தொழிலுக்கு ஆதாரமான காவிரி வைகை, நொய்யல், தாமிரபரணி போன்ற ஆறுகளை புனரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

ஒன்றிய அரசின் நிதி ஆயோக் ஆய்வறிக்கையின் படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 2.2 விழுக்காடு மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் மூலம் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர் நலன் பேணப்படும் என்பதும் பாராட்டத்தக்கது.

குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூபாய் 3500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

எப்போதும் போல் இந்த நிதிநிலை அறிக்கையிலும் கல்வி வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

உயர்கல்வித்துறைக்கு ரூபாய் 8212 கோடி,

பள்ளிக்கல்வித் துறைக்கு 44 ஆயிரத்து நாற்பத்தி இரண்டு கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சிக்கு என்றென்றும் பாடுபடும் திராவிட இயக்க ஆட்சியில் சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட 25 இலக்கிய நூல்கள் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி காண பல்வேறு திட்டங்கள் வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூபாய் 1100 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, மதுரையில் தொழில் புத்தாக்க மையம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி போன்ற நகரங்களில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு,

தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா, மதுரை மற்றும் திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் 300 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா,

விருதுநகர், சேலத்தில் ரூபாய் 2483 கோடி செலவில் ஜவுளி பூங்காக்கள் அமைத்தல்; இதன் மூலம் 2.08 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள்;

ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு ;

கரூர், ஈரோடு, விருதுநகர் மாவட்டங்களில் சிறிய ஜவுளி பூங்காக்கள்,

விருதுநகர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டையில் குறு தொழில் தொகுப்புகள்;

சிறு குறு தொழில் முனைவோருக்கு புதியதாக மூன்று தொழிற்பேட்டைகள் அமைத்தல்;

அம்பேத்கர் தொழில் மேம்பாட்டு திட்டம்,

போன்ற அறிவிப்புகள் தொழில்துறை வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் அடித்தளமாக அமையும்.

மேலும், 2025 ஜனவரியில் உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 60 ஆயிரத்து 567 இளைஞர்கள் தமிழக அரசு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும்; ஜூன் மாதத்தில் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் ;

ரயில்வே வங்கிப் பணிகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் சேர சென்னை ,கோவை, மதுரை மண்டலத்தில் விடுதி வசதியுடன் கூடிய ஆறு மாத பயிற்சி வழங்கும் திட்டம்;

ஆகிய அறிவிப்புகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன.

மகளிர் நலம் பேணுவதில் திமுக அரசு முன்னோடியாக இருப்பது அறிந்ததே;

500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டமான “விடியல் பயணம்” திட்டத்திற்கு ரூபாய் 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மலைப்பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 13 ஆயிரத்து 720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது;

வரும் நிதியாண்டில் பத்தாயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்;

சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது;

கோவை, மதுரையில் மூன்று புதிய தோழி மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்படும்;

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் போன்ற பயன் தரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

2024-25 வரவு செலவு திட்ட அறிக்கையில் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கிலோ மீட்டர் கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு நெய்தல் மீட்சி இயக்கம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூபாய் ஆயிரம் கோடியில் “தொல்குடி” திட்டம், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் “தமிழ்ப் புதல்வன் திட்டம்”, இராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம், புற்றுநோய் மேலாண்மை இயக்கம் போன்ற புதிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை ஆகும்.

“தடைகளை தாண்டி -வளர்ச்சியை நோக்கி” எனும் 2024-25 நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்கும்,“எல்லோருக்கும் எல்லாம்” என்னும் திராவிட இயக்க அடிப்படைக் கோட்பாட்டின் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது.

‘தாயகம்’                                                                                                         வைகோ
சென்னை – 8                                                                                  பொதுச்செயலாளர்
19.02.2024                                                                                        மறுமலர்ச்சி தி.மு.க,

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு! வைகோ கண்டனம்
Next Post
வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சிறப்பான வேளாண் நிதிநிலை அறிக்கை! வைகோ பாராட்டு

Related News

சங்கொலி 20.06.2025
June 13, 2025 by Admin
சங்கொலி 13.06.2025
June 6, 2025 by Admin
சங்கொலி 06.06.2025
June 3, 2025 by Admin