முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / அமராவதி அணையின் நீர் ஆதாரத்தை தடுக்க சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைக்கட்ட கேரளா முயற்சி! வைகோ கண்டனம்

அமராவதி அணையின் நீர் ஆதாரத்தை தடுக்க சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைக்கட்ட கேரளா முயற்சி! வைகோ கண்டனம்

May 21, 2024 by Admin in அறிக்கைகள்

அமராவதி அணையின் நீர் ஆதாரத்தை தடுக்க
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைக்கட்ட கேரளா முயற்சி!

வைகோ கண்டனம்

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் வேளாண் பாசனத்திற்கும், பல லட்சம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆற்றுப் படுகை விளங்குகிறது; அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாகத் திகழும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முனைந்து உள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலம் சட்டமூணார் பகுதியிலுள்ள பாம்பாறு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும் தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன.

இந்நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர்;

கடந்த 2010 ஆம் ஆண்டு பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து கேரள மாநிலம் காந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டிசேரி எனும் இடத்தில், அணை கட்டும் பணியைத் தொடங்கியது.

காவிரி நதிநீர் தீர்ப்பாய தீர்ப்பின் சில பகுதிகளை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட கேரளா முயற்சித்து வந்ததை அறிந்து மதிமுக போர்க்குரல் எழுப்பியது.

2010 பிப்ரவரி 15 அன்று உடுமலைப்பேட்டையில் பல்லாயிரம் விவசாயிகள், வணிகப் பெருமக்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.

பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதைக் கண்டித்து, 2010 மே 28 அன்று நேரடியாக சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த எனது தலைமையில் கேரளா நோக்கி பயணம் மேற்கொண்டபோது, கேரள-தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, நானும் தோழர்களும் கைது செய்யப்பட்டோம்.

பாம்பாற்றின் குறுக்கே அணைகட்டும் ஆபத்தை உணர்ந்து, அதைத் தடுத்திடும் வகையில் மக்களைத் தயார் செய்திட 2012 ஜூன் 24-இல் அமராவதி அணையின் முக்கியப் பாசனப் பகுதியெங்கும் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டேன்.

இதே காலகட்டத்தில் தமிழக பாசனப் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து விவசாய அமைப்புகளும், அனைத்து அரசியல் கட்சிகளும் வெகுண்டு எழுந்து போராடியதன் விளைவாகவும், தமிழக அரசு முயற்சி மேற்கொண்டதன் விளைவாகவும் கட்டுமானப் பணிகள் அப்போது தடுத்து நிறுத்தப்பட்டன.

அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரமான சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள மாநில அரசு தடுப்பு அணை கட்ட முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு சொட்டு நீர் கூட வருவதற்கு வாய்ப்பில்லை.

தமிழக அரசின் அனுமதியோ, ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் துறையின் முன் அனுமதியோ இன்றி தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தில் சட்ட விரோதமாக கேரள மாநில அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகத் தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
21.05.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 24.05.2024
Next Post
சங்கொலி 31.05.2024

Related News

சங்கொலி 20.06.2025
June 13, 2025 by Admin
சங்கொலி 13.06.2025
June 6, 2025 by Admin
சங்கொலி 06.06.2025
June 3, 2025 by Admin