நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டேன்..! துரை வைகோ
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டேன்..! துரை வைகோ
இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக நேற்று (25.06.2024) பதவியேற்றுக் கொண்டேன். நேற்று முன்தினம், முதன்முறையாக பிரம்மாண்டமான நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றேன்.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மனசாட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழையும்போது பிரம்மிப்பாக இருந்தது. நான்கு வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு வாய்ப்பு அமையும் என, நான் கனவிலும் நினைத்ததும் இல்லை; விரும்பியதும் இல்லை.
அரசியலே வேண்டாம் என ஒதுங்கியிருந்த என்னை மறுமலர்ச்சி தி.மு.க தொண்டர்களின் அன்பு தான் அரசியலுக்கு இழுத்து வந்தது.
இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர்களும், ஜாம்பவான்களும் உலவிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் செல்லும்போது, ‘முதன்முறையாக இங்கே வருகின்றோம். நமக்கு எந்த அனுபவமும் இல்லையே என திகைப்படைந்தேன். ஆனபோதும், அந்தத் தருணத்தில் என்னை நம்பி வாக்களித்த இலட்சக்கணக்கான மக்களுக்கும், போட்டியிட வாய்ப்பளித்த கழகத்திற்கும் ஆற்ற வேண்டிய பணிகளை எண்ணிப் பார்த்தேன்’.
என்னை நான் இன்னும் தகுதிபடுத்திக் கொள்ளவும், மாபெரும் இந்த அவையில் என்னை நம்பி வாக்களித்த மக்களின் குரலாக ஒலிக்கவும், உரிமைகளுக்காக வாதிடவும் என்னுள் ஒரு வைராக்கியத்தை உருவாக்கிக் கொண்டேன். கற்றுக் கொள்ளவும், பயணப்படவும் இன்னும் நிறைய இருக்கின்றது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்கும் விழாவிற்கு தன்னுடன் நான்கு பேரை பார்வையாளர்களாக உடன் அழைத்து வரலாம். இன்று புதிதாக பதவியேற்ற பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடைய குடும்பத்தினரையும், உறவினர்களையும் அழைத்து வந்தார்கள்.
ஆனால், நான்.. தேர்தலில் என் வெற்றிக்காகப் பணியாற்றியவர்களில் ஒரு நான்கு பேரை அழைத்து வர வேண்டும் என எண்ணி, மதுரை சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், கழக துணைப் பொதுச்செயலாளர்கள் ஆடுதுறை இரா.முருகன், மருத்துவர் ரொஹையா, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோரை அழைந்து வந்தேன்.
என்னிடம் பலர் கேட்டார்கள். குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்திருக்கலாமே..! அவர்கள் இந்தத் தருணத்தில் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்று சொன்னார்கள்.
நான் அவர்களிடம், ‘ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு நான்கு பேரைத்தான் உடன் அழைத்துவர அனுமதித்து இருக்கிறார்கள். ஒருவேளை இன்னும் சிலரை அழைத்துவர வாய்ப்பு தந்திருந்தாலும் என் வெற்றிக்காக உழைத்த ம.தி.மு.க தோழர்களைத்தான் இங்கே அழைத்து வந்திருப்பேன். என் குடும்ப உறுப்பினர்களை அல்ல’ என்றேன்.
கட்சியில் உண்மையாகவும், விசுவாசமாகவும் பணியாற்றுபவர்களுக்குத்தான் இனி முன்னுரிமை. அவர்களுக்குத் தான் எல்லா வாய்ப்புகளும் தரப்படும் என்பதை உணர்த்தும் விதமாகவும் தான் இவர்களை அழைத்து வந்தேன்.
நான் அரசியலுக்கு வரும்போதே ‘கட்சி தான் என் குடும்பம்’ என்ற உறுதியை எடுத்துக்கொண்டேன்.
நேற்று நான், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் பார்த்து திருத்தணி முதல் குமரி வரை உள்ள கழகத் தோழர்கள் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தோடு பலர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்களே.. அவர்களுக்காக உழைப்பதற்கு இந்தப் பதவியை நான் ஒரு வாய்ப்பாக கருதுகின்றேன்.
நான் அழைத்து வந்த, கழகத்தின் முன்னணி தளகர்த்தர்களான நான்கு பேரும் நான் பதவியேற்றதை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பை பெற்றார்கள். கட்சிப் பெயரை குறிப்பிட்டு என்னை பதவியேற்க அழைத்தபோது, எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்ததோடு ஆனந்தக் கண்ணீர் சிந்தியதாக என்னிடம் சொல்லி பரவசப்பட்டார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக, நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும், முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றேன். அதில் குறிப்பாக, சமாஜ்வாடி கட்சித் தலைவர் சகோதரர் அகிலேஷ் யாதவ் அவர்களுடன் உரையாடும்போது, ‘தலைவர் வைகோ அவர்கள் ஒரு ஜாம்பவான். நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாக பேசக் கூடியவர்’ எனத் தெரிவித்தார். அவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அன்பு சகோதரர் ராகுல்காந்தி உள்ளிட்ட மற்றப் பலத் தலைவர்களும் நம் தலைவர் வைகோ அவர்களின் உடல் நலத்தை அக்கறையுடன் கேட்டறிந்தார்கள்.
நான் பதவியேற்பதை பார்க்க தில்லிக்கு வந்திருந்த கழகத் தோழர்கள் நால்வரும் இன்று ஊருக்குத் திரும்புகிறார்கள். இவ்வளவு தூரம் பயணித்து வந்த அவர்களுக்காக, ஒரு விடுதியில் நேற்று இரவு விருந்தை ஏற்பாடு செய்திருந்தேன்.
இந்தச் சூழலில், இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுக்கான திடீர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அலைபேசியில் தெரிவித்தார்கள்.
கழகத் தோழர்களுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மதிப்பிற்குரிய மல்லிகார்ஜூன் கார்கே அவர்களின் இல்லத்திற்கு ஓடோடிச் சென்றேன்.
அனைத்துக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் வருகை தந்திருந்தார்கள். நாடாளுமன்றத்தில் நாளை எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகளும், கருத்துகளும் கூட்டத்தில் பகிரப்பட்டது. இட நெருக்கடி காரணமாக, காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளின் அருகில் அமர்ந்து இருந்தேன். அதை கவனித்த சகோதரர் ராகுல்காந்தி அவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு உரிய இடம் கொடுத்து அமர வைக்க வேண்டும் என அறிவுறுத்தி, என்னை அவர் அருகில் அமர வைத்துக் கொண்டார். முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் எதிர்பாராமல் கிடைத்த இந்தச் சிறப்பு என் மனதிற்கு மகிழ்வைத் தந்தது. எனக்கான வாய்ப்பு வந்தபோது எனது கருத்தையும் தெரிவித்து உரையாற்றினேன். என்னுடைய பேச்சை பலரும் பாராட்டினார்கள். இதை, மறுமலர்ச்சி திமுகவிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக கருதுகின்றேன்.
கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய பல்வேறு புதிய அனுபவங்கள் கிடைத்தன.
மறுமலர்ச்சி திமுகவிற்கு பெருமை தேடித் தரக்கூடிய வகையிலும், வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பெறும் வகையிலும் எதிர்கால என் பணிகளை அமைத்துக் கொள்வேன்.
கழகத் தோழர்களின் மகிழ்வே இயக்கத் தந்தையின் மகிழ்வு. உங்களின் மகிழ்வே என் மகிழ்வு எனக் கருதி இவற்றையெல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
26.06.2024