முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / மதுரை வட்டாரத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி! வைகோ கண்டனம்

மதுரை வட்டாரத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி! வைகோ கண்டனம்

November 26, 2024 by Admin in அறிக்கைகள்

மதுரை வட்டாரத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க
வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி!

வைகோ கண்டனம்

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம் அமைச்சகம் சில நாட்களுக்கு முன் கனிம வளங்களை எடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் ஏலம் விட்டிருந்தது. அதில் ஸ்டெர்லைட் வேதாந்தா துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட், டங்ஸ்டன் கனிமத்தை எடுக்கும் உரிமத்தைப் பெற்றுள்ளது.

இதன்படி ஆந்திரா மாநிலம் பாலேபாளையம் மற்றும் தமிழ்நாட்டில் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் 7ஆவது ஏலம் நடத்தப்பட்டது. அதில் மேலூர் நாயக்கர்பட்டியில் உள்ள டங்ஸ்டன் (Tungsten) கனிமத்தைத் தோண்டி எடுப்பதற்கு 5,000 ஏக்கர் பரப்பளவில் சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் Hindustan Zinc) நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் என்னும் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதற்கு வேதாந்தா குழுமத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரிட்டாபட்டி கிராமத்தை 5000 ஏக்கர் (193.215 ஹெக்டேர்) பரப்பளவில் பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சுற்றி ஏழு சிறிய குன்றுகள் உள்ளன. 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக இப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்களும் உள்ளன. இப்பகுதி விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். மேற்கண்ட குளம், ஏரி மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

மேலும் இப்பகுதியில், 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்து கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடைவரை கோயில்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ளன.

கனிம சுரங்கம் அமைக்கப்படவுள்ள அரிட்டாபட்டி கிராமம் இயற்கை வளங்கள் மிகுந்த பகுதி என்பதால் இங்கு வாழும் மக்கள் மலைக்குன்றுகளில் இருந்து வரும் மழைநீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சுரங்கம் அமைக்கப்பட்டால் நீர் ஆதாரமான 7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்.

மேலும் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் சுற்றுச்சூழல் தளமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் உள்ள மலைகளில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராஜாளி கழுகு போன்ற 250க்கும் மேற்பட்ட உயிரினங்களும் அழுங்கு மலைப் பாம்பு, தேவாங்கு போன்ற அரியவகை உயிரினங்களும் அழிந்து போகும்..

இப்பகுதியில் 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், குடைவரைக் கோவில்கள், சமணர்ப் படுக்கைகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சான்றுகள் இத்திட்டத்தால் அழிக்கப்படுவதோடு அருகில் உள்ள பெருமாள் மலையில் உள்ள உயிரினங்களும் அழிக்கப்படும் என்பதால் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 16 பேரைச் சுட்டுக் கொல்வதற்கு காரணமான வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்திற்கு மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கும், சுற்றுச் சூழலைக் கெடுப்பதற்கும் மீண்டும் ஒரு அனுமதியை ஒன்றிய பாஜக அரசு வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரிட்டாப்பட்டியில் வேதாந்தா நிறுவனம் கனிம வள சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி உட்பட எந்த அனுமதியும் வழங்கக்கூடாது,

மதுரை வட்டாரத்தில் ஸ்டெர்லைட் ஆலை போன்று இன்னொரு சுற்றுச்சூழல் சீரழிவுக்கு இடம் அளித்து விடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை – 8
26.11.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர்: அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வைகோ உரை
Next Post
மருத்துவர் ராமதாஸ் திசை திருப்ப முனைகிறார்! பொய்யான வதந்திகளுக்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை - வைகோ அறிக்கை

Related News

சங்கொலி 20.06.2025
June 13, 2025 by Admin
சங்கொலி 13.06.2025
June 6, 2025 by Admin
சங்கொலி 06.06.2025
June 3, 2025 by Admin