முட்டுக்காடு நீர்நிலை பாதுகாப்பு பணிகள்; தொடரும் அடுத்தகட்ட நகர்வு..! – துரை வைகோ
முட்டுக்காடு நீர்நிலை பாதுகாப்பு பணிகள்; தொடரும் அடுத்தகட்ட நகர்வு..!
முட்டுக்காடு உப்பங்கழி (Back Water) நீர்நிலை பகுதி சுற்றுலாத் தளமாகவும், இயற்கை எழிலார்ந்த இடமாகவும் இருந்து வந்த நிலையில், இந்தப் பகுதியில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் குப்பைகள் மற்றும் கழிவுகளால் பெருமளவில் சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளது.
தகவல் அறிந்து, கடந்த 2020 ஆம் ஆண்டில் முட்டுக்காடு நீர்நிலையை பாதுகாக்கும் முயற்சியில் குழுவாக இறங்கினோம். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை அழைத்துச் சென்று அந்தப் பகுதி முழுவதையும் சுற்றிக் காண்பித்து உண்மை நிலையை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தோம். அதனைத் தொடர்ந்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக் குழு தலைவர் நீதியரசர் ஜோதிமணி அவர்களின் தலைமையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டார்கள். இதன் காரணமாக, மலைபோல குவிந்து கிடந்த கழிவுகளை 24 மணி நேரத்தில் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தார்கள்.
முட்டுக்காடு நீர்நிலையை பாதுகாப்பதற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்தது. தீர்ப்பாயம் அமைத்த கண்காணிப்பு குழுவில் என்னையும் ஒரு நபராக இணைத்துக் கொள்ள அனுமதி கோரி குறுக்கீடு மனு (Implead Petition) ஒன்றை 23.12.2020 அன்று தாக்கல் செய்தேன். 29.01.2021 அன்று, அந்த வழக்கில் என்னை தலையீட்டாளர் (Intervenor) ஆக நியமித்தார்கள். குழுவில் நேரடியாக பங்கேற்க இயலாவிட்டாலும், வழக்கு தொடர்பான ஆவணங்களையும், தரவுகளையும் எந்த நேரத்திலும் நான் வழங்கலாம்.
முட்டுக்காடு நீர்நிலை பகுதிகளில் தற்போதும் ஆக்கிரமிப்புகள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், கழிவுகள் வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதாலும், அது தொடர்பாக 23.12.2021 அன்று, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கண்காணிப்புக் குழு தலைவர் மாண்புமிகு நீதியரசர் ஜோதிமணி அவர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன்.
அந்தக் கடிதத்தின் சுருக்கம் :
முறையாக பிரித்தெடுக்கப்படாத கழிவுகள் முட்டுக்காடு நீர்நிலை மற்றும் பக்கிங்காம் கால்வாய் முழுவதும் கலக்கின்றது. நீர்நிலை நெடுகிலும் குப்பைகள் கொட்டப்படுவதாலும், எரிக்கப்படுவதாலும் முட்டுக்காடு நீர்நிலை பெருமளவில் மாசடைந்து உள்ளது.
இதைக் கண்காணிப்பதற்காக, கூட்டுக்குழு ஒன்றை தீர்ப்பாயம் உருவாக்கியது. அந்தக் குழுவின் உறுப்பினராக இருக்கின்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம், இது தொடர்பான எந்தப் பணிகளும் இதுவரை நடைபெறவில்லை என்பதை தொடர்ந்து தெரிவித்து வருகின்றோம்.
இந்தப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை நிர்வாகம் முறையாக செயல்படாமல், 2016 மற்றும் 2019 இல் இயற்றப்பட்ட சட்டங்களை மீறி வருகின்றது.
முட்டுக்காடு உப்பங்கழி நீர்நிலை பகுதிக்கு உட்பட்ட, மூன்று ஊராட்சிகளில், ஒரு இடத்தில் கூட குப்பைகளைப் பிரித்தெடுத்தல் மற்றும் உரமாக்குதல் பணிகள் நடைபெறவில்லை. காற்று மற்றும் நீர் மாசுபாடுகளில் இருந்து நீர்நிலையைப் பாதுகாப்பதற்கு மூன்று முறைகளில் பிரித்தெடுத்தல் (Three way segregation) முறைதான் ஒரே தீர்வு.
நாவலூர் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட, குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திறந்தவெளி மழைநீர் வடிகால் மூலம் முட்டுக்காடு நீர்நிலை பகுதியில் நேரடியாகக் கலக்கின்றது. மேலும், குப்பை மற்றும் கழிவுநீர் டேங்கர் லாரிகளின் மூலம் பலமுறை எடுத்து வரப்பட்டு தினமும் இங்கு கொட்டப்படுகின்றன. 11.08.2021 அன்று எடுக்கப்பட்ட படங்களை ஆதாரமாக இணைத்துள்ளேன்.
அதைப்போல, உணவகங்களின் சமையலறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சாலையை அடுத்துள்ள விரிவாக்கப் பகுதிகளில் கொட்டப்படுகின்றன. அதை உண்பதற்காக, கால்நடைகளும் நாய்களும் அந்தப் பகுதி முழுவதும் திரிகின்றன. இதனால், சாலைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதுபோன்ற சீர்கேடுகளை தடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு, முட்டுக்காடு நீர்நிலை பகுதிக்கு உட்பட்ட, மூன்று ஊராட்சிகளிலும் குப்பை கிடங்குகளை அமைக்க வேண்டும். மூன்று ஊராட்சிகளுக்கும் பொதுவான ஒரு இடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும்.
நீர்நிலை பகுதியின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வழக்கமாக, நீரில் கலக்கும் கழிவுகளைக் கட்டாயம் ஆய்வு செய்து உரிய துறைகளுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்பன போன்ற, பல்வேறு தீர்வுகளையும், தற்போது நடைபெற்று வரும் அத்துமீறல்கள் குறித்தும் நீதியரசர் மாண்புமிகு ஜோதிமணி அவர்களுக்கு, கடிதத்தின் மூலம் தெரியப்படுத்தி உள்ளேன்.
கடிதத்தின் நகலை,
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மாண்புமிகு சி.வீ.மெய்யநாதன் அவர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.
இயற்கை எழிலார்ந்த முட்டுக்காடு நீர்நிலையை, ஆக்கிரமிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் இருந்து முழுவதுமாக பாதுகாக்கும் வரை, நமது போராட்டம் தொடரும்.
அதில் எந்த சமரசமும் இல்லை..!
அன்புடன்,
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
10.01.2022








