பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக!
பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை;
காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக!
வைகோ அறிக்கை
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தேரடித் தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தவர் ராஜசேகரன்(65). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவரது மனைவி தனலெட்சுமி.
கடந்த ஜூன் 22-ஆம் தேதி திருச்சி, கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் பிரிவு உதவி ஆய்வாளர் உமாசங்கரி தலைமையிலான காவல்துறையினர் ராஜசேகரன் கடைக்கு வந்து திருட்டு நகை வாங்கியதாகக் கூறி, ராஜசேகரனையும், அவரது மனைவி தனலெட்சுமியையும் விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 26-ஆம் தேதி இரவு எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் செட்டியக்காடு அருகே வந்தபோது அந்த ரயில் முன் பாய்ந்து ராஜசேகரன் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இவரது உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், நகர தங்கம், வெள்ளி வியாபாரிகள் சங்கம், பொற்கொல்லர்கள் சங்கத்தினர் ராஜசேகரனின் தற்கொலைக்கு திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் துன்புறுத்தலே காரணம் என்று கூறி உடலை வாங்க மறுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை ஏ.டி.எஸ்.பி. முத்தமிழ்செல்வன், சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சம்மந்தப்பட்ட திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல்துறை எஸ்.ஐ. உமாசங்கரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, உடலைப் பெற்று, இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு ரயில்வே நிலையப் பகுதியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்தனர்.
இந்நிலையில், அவரது கடையில் உள்ள கருவூலப் பெட்டியில் உள்ள ரசீது புத்தகத்தில் ராஜசேகரன் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது. இதனைக் கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். அந்தக் கடிதத்தில் ‘எனது சாவுக்கு திருச்சி காவல்துறையினர்தான் காரணம்’ என எழுதி வைத்துள்ளார்.
நகை கடைத் தொழிலில் மிக கண்ணியமாக நடந்து வந்த பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ராஜசேகரனையும், அவரது மனைவியையும் காவல்துறையினர் கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி ராஜசேகரன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்தி, காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும்,உயிரிழந்த ராஜசேகரன் குடும்பத்திற்கு உதவி செய்யவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
04.07.2023