மதுரை குலுங்கட்டும்! மாநாடு வெல்லட்டும்!! வைகோ கடிதம்
மதுரை குலுங்கட்டும்!
மாநாடு வெல்லட்டும்!!
வைகோ கடிதம்
இமைப்பொழுதும் நீங்காது என்
இதயத் துடிப்போடும்,
இரத்தச் சுழற்சியோடும்
கலந்துவிட்ட கண்ணின் மணிகளே!
கழகத்தின் 29 ஆவது பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேற்றப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி கழகத்தின் கண்ணின் மணிகள் கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிக்காட்டி இருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆளுநரின் செயல் பாடுகள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களை கோபப்பட செய்திருக்கிறது என்பதை இந்த கையெழுத்து இயக்கத்தின் மூலம் அறிந்து இருக் கிறோம்.
ஆளுநர் பதவியே கூடாது என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடர்ந்து கூறி வந்திருக் கின்றார். வெள்ளை ஏகாதிபத்திய அரசாங்கத்தின் எச்சமாக இன்னமும் ஆளுநர் பதவி என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அரசமைப்புச் சட்டம் வழங்கி உள்ள அதிகாரம் ஆளுநர்களுக்கு வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்பதை ஆர்.என்.ரவி புரிந்து கொண்டு செயல் படுவதாக தெரியவில்லை.
இந்திய குடியரசுத் தலைவர் தமிழ்நாடு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களிடையே கழகம் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது ஏன்?
கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும்; ஒரு சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரை ஆற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தருமத்தை உயர்த்திப் பிடித்தார்.
“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய அரசியலமைப்பு, சனாதன தர்மத்தில் கூறப்பட்டு உள்ளது. கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும், தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை.
சனாதன தர்மம்தான் பாரதத்தை உருவாக்கியது. நமது நாட்டின் எண்ணம் செயல் போன்றவற்றில் சனாதானம் உள்ளது.
மற்ற நாடுகளைப் போல ராணுவ வீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாட்டை உருவாக்கவில்லை. இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது.
சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து காந்தகார், பெஷாவர் போன்ற நகரை கஜினி முகமது உருவாக்கினார். ஆனால், அந்த நகரங் கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் சனாதன தர்மத்தின் வலிமையை” என்று பேசினார்.
ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒரு நபர் அரசியலமைப்புச் சட்ட நெறி களை மீறி, சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது என்று பேசினார்.
மனித சமத்துவத்தை மறுக்கும் வருணாசிரம தருமத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்களின் கோட்பாட்டை தூக்கிப் பிடித்து பெருமை பொங்கப் பேசி உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தான் யார் என்பதை வெளிப்படுத்தினார்.
இந்தியாவை வழிநடத்துவது அண்ணல் அம்பேத்கர் வடித்தெடுத்த அரசியல் அமைப்பு சட்டமே தவிர, நால்வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மம் அல்ல.
ஆளுநர் ரவி தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள் நெறியை உலகுக்குத் தந்த தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பிறவி பேதத்தை கற்பிக்கும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசும் ஆளுநர் ரவி அந்த பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு கடந்த 2 ஆண்டுகளில் அனுப்பி வைக்கப்பட்ட 21 மசோதாக்களில் 6 மசோதாக்களுக்கு மட்டுமே ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டார்.
ஆன் லைன் ரம்மி சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார். இரண்டு முறை சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி அனுப்பிய பிறகு ஒப்புதல் தந்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை பரிசீலிக் காமல், நிராகரித்து விட்டேன் என்று ஆளுநர் ஆணவத்துடன் கொக்கரிக்கிறார்.
சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாகிவிடும் என்று எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லி இருக்கிறார்..
2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி-9 ஆம் தேதி தொடங்கியது.
அரசு தயாரித்து அளித்த உரையில் இருந்த “பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் கொள்கைகளைப் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது” என்ற வரியை நீக்கிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் பேசினார்.
மேலும்,” மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது. பொருளா தாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால், தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்த சொற்றொடர்களை ஆளுநர் தவிர்த்து விட்டார்.
மேலும் பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற பத்தியையும் வாசிக்காமல் தவிர்த்தார்.
இதேபோல், உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் அவர் வாசிக்காமல் தவிர்த்தார்.
நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த தலை வர்கள் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர், சமத்துவத்துக்காக போராடிய மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரைக் கூட ஆளுநர் சொல்ல மறுத்தார்.
சமூக நீதி, சமத்துவம், பெண்ணடிமைத் தனம் ஒழிப்பு, மத நல்லிணக்கம், உள்ள டக்கிய வளர்ச்சி ஆகிய வார்த்தைகளை வாசிக்க அவருக்கு மனம் இல்லை.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா நடைபெறும் என்று அறிவிக்கும் அழைப்பிதழில் தமிழ் நாடு என்ற பெயரையும் தமிழ்நாட்டின் இலட்சினையையும் நீக்கினார் ஆளுநர் ரவி.
தமிழ்நாட்டு அரசின் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ராஜ்பவன் வாழ்க்கையை அனுபவிக்கும் ஆளுநர் ரவிக்கு, தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் கசக்கிறது.
தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் மாளிகைக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு ஆரிய ரவி வெளியேற்றப்பட வேண்டும் என்று மக்கள் கொதிக்கிறார்கள் என்பதை கையெழுத்து இயக்கத்தில் கண்டோம்.
இன்னும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக ஆளுநர் பேசியிருப்பது ஆணவத் தின் உச்சமாகும்.
வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகாரத் திமிரில் உளறிக் கொட்டினார்.
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத் தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் ஆளுநர் கொடும் சொற்களை வீசினார்.
அதே வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஆளுநர் பேசுகிறார் என்பதை மக்கள் எடை போட்டுப் பார்ப்பார்கள்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட் டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலிகொடுத்து இருக்கிறார்கள், நீதிமன்றங் களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்துவிட்டன. இருந்தும் ஆர்.என்.ரவி மக்கள் நலனைவிட கார்ப் பரேட் முதலாளி நலனே பெரிது என்று பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர், எந்தத் தத்துவத்தின் சாயலும் தம் மீது படுவதற்கு இடம் தரக் கூடாது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு அமைப்புச் சட்டத்தின்படி கடமை ஆற்றா மல், அத்துமீறி செயல்பட்டு வருகின்றார்.
மத்திய பாஜக அரசின் முகவராக ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் குரலை எதி ரொலிக்கின்றார். நாட்டின் 73 ஆவது குடியரசு நாள் விழாவுக்கு, ஆளுநர் விடுத்த வாழ்த்துச் செய்தியில், மும் மொழிக்கு ஆதரவான அறிவுறுத்தலை வழங்கினார்.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவை என்றும் சுட்டிக்காட்டினார். உலகப் பொதுமறை திருக்குறளை வேத சட்ட தத்துவத்தினுள் அடைக்க முயன்றார்.
மார்ச் மாதம் கோவையில், தென் மண்டல பல்கலைக் கழகங்களின் துணை வேந் தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர், “கூட்டு ஆட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல; இந்தியா என்ற நாடு 1947 ஆம் ஆண்டு பிறந்தது அல்ல” என்று குறிப்பிட்டார். இது ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின் குரல் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
உதகமண்டலத்தில் ஆளுநர் தன்னிச்சை யாகக் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாடு குறித்து, தமிழ்நாடு அரசிடம் தகவல் கூடத் தெரிவிக்கவில்லை. இந்த மாநாட்டில் ஒன்றிய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசினார்.
இந்தியா ஒரே நாடு; ஒரே குடும்பம் என்று குறிப்பிட்டு, இந்துத்துவ சனாதன சக்திகளின் ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்கிற கோட்பாட்டிற்கு வக் காலத்து வாங்கினார். மீண்டும் “ஒரே பாரதம்; உன்னத பாரதம்” என்ற பிரதமர் மோடியின் கருத்தை வலியுறுத்தி, சென்னையில் மீன்வளத்துறை கருத் தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
தமிழ்நாட்டில் சமயம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று, இந்தியாவின் ஆன்மீகத் தலை நகரம் தமிழ்நாடு என்ற கருத்தை, பலமுறை பேசி இருக்கின்றார். இந்தியத் தொழில்துறையின் தலைநகரம்தான் தமிழ்நாடே தவிர, ஆளுநர் கருதுவது போல, மதவெறிக்கு இங்கே இடம் இல்லை; வட இந்திய மாநிலங்களைப் போன்ற மதவெறிச் சண்டைகளுக்கு, தமிழ் நாட்டு மக்கள் இடம் தர மாட்டார்கள். இங்கே அனைத்துத் தரப்பு மக்களும், அமைதியாக வாழ்கின்றனர். ஆளுநர் ரவி, தொடர்ந்து மாநில அரசின் செயல்பாடு களுக்குக் குறுக்கே நிற்பதையும், இந்துத்துவக் கோட்பாட்டிற்கு ஆதரவான கருத்துகளை முன்மொழிவதையும், அரசு அமைப்புச் சட்ட நெறிகளைக் காலில் போட்டு மிதிப்பதையும், ஏற்றுக்கொள்ள முடியாது.
வடலூரில் திரு அருட் பிரகாச வள்ள லாரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று பேசினார். சனாதன தர்மத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதன தர்மத்திற்கு ஆதரவாளராக ஆளுநர் பேசி இருப்பதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
சாதி, சமயங்கள், மதங்கள், ஆசிரமங்கள், இவர்களுடைய மூடப்பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும், சுருக்கமாக கூறினால் சனாதனத்தை குழி தோண்டி கொட்டி மண்மூடி புதைக்க வேண்டும் என்று முழங்கியவர் வள்ளலார்.
சனாதனம் என்பது ஆரிய தர்மம்! வள்ள லார் பேசியது தமிழர் அறம்! ஆளுநர் ரவி கீழ்கண்ட வள்ளலாரின் வரிகளைப் படித்து உரிய அறிவினைப் பெற வேண்டும்.
“இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு…
“மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கெலாம்
குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு”
“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளை விளை யாட்டே”
அதாவது, நான்கு வருணங்களும், நால் வகை ஆசிரமங்களும் (பிரமச்சரியம், கிருகத்தம், வானப் பிரத்தம், சந்நியாசம்) ஆசாரங்களும் (சாதி, மத, குல, ஒழுக் கங்கள்) சொன்ன சாத்திர சரிதங்கள் எல்லாமே பிள்ளை விளையாட்டு என்று வள்ளலார் எழுதினார். வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலான அனைத்து நூல்களுமே “ஜாலம்தான்”, இவை எல்லாம் பொய் என்று அறைந்து கூறியவர் வள்ளலார்.
ஆளுநர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்; தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் தரக்கூடாது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என்பது, மாநில அரசின் அதிகாரம் ஆகும். ஆளுநர் தலையிட முயற்சிப்பது அத்துமீறல் ஆகும்.
ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் இரவி தமிழ் நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத் திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். எனவேதான் கழகத்தின் பொதுக்குழுவில் நாம் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று கையெழுத்து இயக்கத்தை தொடங் கினோம்.
நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தமிழ்நாடு மக்களிடம் பெற்றிருக்கிற கையெழுத்து படிவங்களை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
எனவே அதற்குள் கையெழுத்து இயக் கத்தை மேலும் துரிதப்படுத்தி ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று ஒப்படைக்க வேண்டும். அதற்கு ஏற்ப மாவட்ட செய லாளர்கள் திட்டம் வகுத்துக் கொண்டு இந்தப் பணியை முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழா திறந்தவெளி மாநாட்டை மதுரையில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடத்துவது என்று ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்ற கழக நிர்வாகக் குழுவில் முடிவு எடுத்தோம்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்க மாநாட்டை மதுரையில் மிகச் சிறப்போடு நடத்திக் காட்டி வெற்றி சரிதம் படைத்த செயல்வீரர் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் ஆருயிர் சகோதரர் புதூர் பூமிநாதன் அவர்கள் இந்த மாநாட்டையும் சிறப்பாக நடத்துவதற்கு முனைப்புடன் பணிகளை தொடங்கியுள்ளார்.
கழக நிர்வாக குழுவை முடித்துக் கொண்டு மறுநாள் ஜூலை 13 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதனோடு மதுரைக்குச் சென்று மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பார்த்து தேர்வு செய்தோம்.
மாநாடு நடத்தப் போகும் இடம், திறந்த வெளி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு உகந்ததாக அமைந்து இருக் கிறது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகின்ற நம் தோழர்களின் வாகனங்கள் நிறுத்து வதற்கு போதுமான இடமும் மாநாட்டுத் திடலுக்கு அருகில் இருக்கிறது.
பந்தல் கலைத் திலகம் சிவா அவர்கள்தான் திறந்தவெளி மாநாட்டிற்கான மேடையை அமைக்கிறார்.
அமைப்பு தேர்தல் நடைபெற்று முடிந்து கழகம் பொலிவோடும் புத்தெழுச்சி யோடும் உள்ள நிலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடப் போகிறோம்.
தமிழ், தமிழ்நாடு, தமிழர் நலன் காக்கும் திராவிட இயக்கமாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அமைத்துத் தந்த இலட்சியப் பாதையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் பீடு நடை போட்டு வருகிறது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மாநில சுயாட்சிக் கோட்பாடுதான் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வலு சேர்ப்பது என்பதை இந்தியா முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகள் புரிந்து கொண்டுள்ளன.
குறிப்பாக 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடி தலைமை யில் ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் இந்தியா என்பது ஒற்றை ஆட்சியை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது.
தனித்தனி தேசிய இனங்கள் பல்வேறு பட்ட கலாச்சாரங்கள் பல மொழிகள் இணைந்துதான் இந்தியா என்கிற அமைப்பு உருவானது.
ஆனால் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா கூட்டம் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கின்றன.
மாநிலங்களே இருக்கக் கூடாது; அவை தனித்தனி அடையாளங்களோடு திகழக் கூடாது;
அவற்றையெல்லாம் நகர சபைகளைப் போல ஆக்கிவிட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் பின்ன ணியில் வெறித்தனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில்தான் பேரறிஞர் அண்ணா அவர்களின் மாநில சுயாட்சி கோட்பாடு மற்றும் மாநிலங்களின் உரிமைக் கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டியத் தேவையை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கட்சிகளும், உணர தலைப்பட்டுள்ளன. நாட்டின் பன்முகத்தன்மையை சீர் குலைத்து அரசியல் அமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிவதற்கு இந்துத்துவ சக்திகள் துணிந்திருக்கின்ற நிலையை கடந்த 10 ஆண்டுகளாக நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் சிறுபான்மை மக்களை கொன்று குவித்த ரத்த வெறி பிடித்த கூட்டம், அதைவிட கொடுமையாக மணிப்பூரில் கடந்த நான்கு மாத காலமாக வேட்டையாடி வருகிறது.
இதன் உச்சகட்டமாக மணிப்பூரில் குக்கி இன பழங்குடி பெண்களை துகிலுரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கி ஒழித்த காணொளி காட்சிகள் வெளியாகி உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் மீது கடும் கண்டனக் கணைகளை ஏவின.
மணிப்பூர் பற்றி எரிகிற பொழுது வாய் திறவாத பிரதமர் மோடி இந்தியாவின் நீரோ மன்னராக காட்சி தருகிறார்.
2024 இல் நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மதவெறி பிடித்த கூட்டத்தின் கைகளில் இருந்து அதிகாரத்தை பறிக்க வேண்டியதுதான் இன்றைக்கு இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கட்சிகளின் உடனடிக் கடமை ஆகும்.
இதனை உணர்ந்துதான் எதிர்கட்சித் தலைவர்கள் பாட்னாவிலும், பெங்களுரு விலும் கூடி உறுதியான முடிவுகளை எடுத்திருக்கின்றனர்.
பெங்களுருவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கழகத்தின் சார்பில் நான் பங்கேற்றேன்.
இந்த சூழ்நிலையில்தான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை திறந்த வெளி மாநாடாக சிறப்பாக கொண்டாட இருக்கிறோம்.
இந்த மாநாட்டிற்கு கழக அவைத்தலைவர் கொங்கு நாடு கழகத்திற்கு அளித்துள்ள கொடை ஆடிட்டர் அர்ஜூனராஜ் அவர்கள் தலைமை வகிக்க இருக்கிறார். மதுரை மண்டலத்தின் செயல்வீரராக திகழும் அடல் ஏறு நமது சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் அவர்கள் வரவேற்புக் குழு தலைவராக இருந்து மாநாட்டை பொறுப்பேற்று நடத்துகிறார்.
கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அவர்கள் மாநாட்டை திறந்து வைக்கிறார்.
குமரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.வெற்றிவேல் அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
திராவிட இயக்கச் சுடரை திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என்.செல்வராகவன் ஏற்றுகிறார்.
திராவிட இயக்க முதல் மூன்று தலை வர்கள் திருவுருவப்படத்தை கழகத் துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி அவர்கள் திறந்து வைக்கிறார்.
தந்தை பெரியார் திருவுருவ படத்தை கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா.முருகன் அவர்களும், மொழிப்போர் தியாகிகள் படங்களை கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா ஷேக் முகமது அவர் களும், பேரறிஞர் அண்ணா படத்தை ஆட்சிமன்றக் குழு செயலாளர் டாக்டர் சி.கிருஷ்ணன் அவர்களும் திறந்து வைக்கின்றனர்.
கழகத்தின் வீறுகொண்ட சொற்பொழி வாளர்கள் கருத்து மழை பொழிகின்றனர்.
கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் சிறப்புரை ஆற்று கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சதன் திருமலைக்குமார், வழக் கறிஞர் கு.சின்னப்பா, டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சரியாக இரவு 7 மணி அளவில் நான் உரையாற்றி மாநாட்டை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், தேனி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட செயலாளர் பசும் பொன் மனோகரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் மாநாட்டின் வெற்றிக்கு பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வருகின்றனர்.
கழக நிர்வாக குழுவில் மதுரை மண்டல மாவட்ட செயலாளர்கள், மாநாட்டு நிதியை திரட்டித்தர உறுதி அளித்ததன் பேரில் நன்கொடை சீட்டுகள் அனுப்பப் பட்டு இருக்கின்றன.
அந்த நிதியை நேரில் பெற்றுக் கொள்ள ஆகஸ்ட் 14 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.
அதற்குள்ளாக மாநாட்டு நிதியை மதுரை மண்டல மாவட்ட அமைப்புகள் மூலம் திரட்டித் தந்தால் மாநாட்டிற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் எழுதத் தொடங்கி விட்டீர்களா? ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக் கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததைப் போல நாம் நடத்துகிற அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டையும் மக்கள் கவனத் திற்கு எடுத்துச் செல்ல சுவர் விளம் பரங்கள், விளம்பரப் பதாகைகள் காணும் திசையெல்லாம் தென்பட வேண்டும்.
2019 ஆம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற மாநாட்டிற்கு பிறகு இடையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நாம் மாநாடு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடை பெறும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக ஆக்கிக் காட்டுவதற்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிமையைப் பறைசாற்றும் வகையிலும் மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கழகத்தின் கண்ணின் மணிகள் மதுரையில் வந்து குவிவதைக் காண் பதற்கு காத்திருக்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலை நாடு எதிர் நோக்கி உள்ள காலக்கட்டத்தில் நாம் நடத்துகிற மாநாடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவை பெருகச் செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை.
மதுரை குலுங்கட்டும்! மாநாடு வெல்லட்டும்!
எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்
வைகோ
– சங்கொலி, 04.08.2023