கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒடிசா பாலு மறைவு! வைகோ இரங்கல்
கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒடிசா பாலு மறைவு!
வைகோ இரங்கல்
கடலியல் வரலாற்று ஆய்வாளர், தமிழ் மொழியின் மீதும் இனத்தின் மீதும் பற்றுக்கொண்ட ஒடிசா பாலு அவர்கள் மறைவு செய்தி கேட்டு பெருந்துயருற்றேன்.
வாய் புற்று நோய்க் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மறைந்துவிட்டார்.
மருத்துவ மனைக்கு செல்லும் சில நாட்களுக்கு முன்பு கூட கொரியா செல்ல இருக்கும் அமெரிக்கன் பள்ளி மாணவர்களுடன் பேசுவதற்கு நாக்கு ஒத்துழைக்காத நிலையிலும் கலந்து உரையாடியிருக்கிறார். அவருடைய தேடல்கள் எழுத்து வடிவில் வரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கிறார்.
உலகில் முதல் நாகரிக மொழி எது என்ற ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது. அந்த ஆய்வில் திராவிட மொழிக் குடும்பம் என்ற சொல்லக் கூடியதாக தமிழ் மொழி இருக்கிறது.
அந்த திராவிடம் என்பது இங்கே தமிழ்நாட்டையும், ஆந்திராவையும் இணைக்கக் கூடிய ‘திரையன் நாடு’ என்ற நாட்டை பற்றி சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பு வரும். அந்த திரையன் நாட்டைத்தான் ‘திராவிட நாடு’ என்று பின்னால் குறிப்பிடுகிறார்கள் என்றும், இந்த ‘திராவிடம்’ என்பதற்கு ‘திரை மீளர்’ என்ற பொருள் இருக்கிறது. கடல் கடந்து போய் திரும்பி வந்தவர்களை ‘திரை மீளர் ‘ என்ற சொல் குறிக்கும். இன்றைக்கும் நடுநிலக் கடலை ‘திரமிளம்’ என்று ஒரிசாவில் சொல்கிறார்கள் என்றும் ஆய்வாளர் ஒடிசா பாலு கூறியிருக்கிறார்.
தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வந்தார் ஒடிசா பாலு.
இனப்பெருக்கத்திற்கு தமிழக, ஒரிசா கடற்கரைகளுக்கு வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற்காலத்தில் துறைமுகங்களாக மாற்றப்பட்டதையும், ஆமைகள் தம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகளை பின்பற்றியே தமிழ் கடலோடிகள் உலகம் முழுவதையும் வலம் வந்தனர் என்ற ஆய்வுக் கருத்தையும் முன்வைத்தார்.
கடலோடிகளை, மீனவர்களை மீன் பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்றுச் சூழல் அறிவு பெற்றவர்கள் என்றார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கடலியல் வரலாற்று அறிஞரின் மறைவு ஈடுசெய்ய முடியாதது. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் தேடல்கள் எழுத்து வடிவில் கொண்டுவர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
07.10.2023