அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்து விட்டது! வைகோ அறிக்கை
அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்து விட்டது!
வைகோ அறிக்கை
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018 இல் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், டாக்டர் சுரேஷ் பாபுவிடம் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக ரூ.3 கோடி லஞ்சம் தருமாறு மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி கூறியுள்ளார்.
திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அங்கித் திவாரி 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.
இது குறித்து மருத்துவர் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் தகவலறிந்து அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையிலான காவல் துறையினர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காரிலிருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி, அவரையும் கைது செய்தனர்.
தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத் துறை மிகத் திறமையாகச் செயல்பட்டு, கையும் மெய்யுமாக அங்கித் திவாரியை பிடித்தது பாராட்டுக்குரியதாகும்.
மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தச் சென்றனர். ஆனால் அங்கு சோதனை நடத்த மறுக்கப்பட்டது. பின்னர் அங்கித் திவாரி அலுவலகத்தில் மட்டும் சோதனை நடத்த அனுமதிக்கப்பட்டது.
ஒன்றிய பாஜக அரசு, தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத்துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரியின் கைது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மாநில அரசின் அனுமதி இன்றி இந்த அமலாக்க துறையை தலைமை செயலகத்துக்குள் ஏவி விட்டு திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த ஒன்றிய பாஜக அரசு முனைந்தது.
தற்போது மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு உள்ளே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை நுழைந்து சோதனை நடத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.
மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலங்களிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.
இந்தியா முழுவதும் அமலாக்கத்துறையில் இதேபோன்று லஞ்ச ஊழல் தலைவரித்து ஆடுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி, 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.
அப்போது ஏலச் சீட்டு மோசடி விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யாமல் இருக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் ரூ. 15 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று குற்றவாளி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் பணத்தை வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேரையும் கையும் களவுமாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் கைது செய்த நிகழ்வு நடைபெற்றிருந்தது.
தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டதன் மூலம் ஒன்றிய பாஜக அரசின் அரசியல் கருவியான அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டது.
அமலாக்கத்துறை குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிய வேண்டும்.
அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய பாஜக அரசு நடத்திவரும் மிரட்டல் அரசியல் கடும் கண்டனத்துக்குரியது.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச்செயலாளர்
02.12.2023 மறுமலர்ச்சி தி.மு.க.,