டிசம்பர் 3 : உலக மாற்றுத் திறனாளிகள் நாள் – வைகோ வாழ்த்து
டிசம்பர் 3 : உலக மாற்றுத் திறனாளிகள் நாள்
வைகோ வாழ்த்து
உலக மாற்றுத் திறனாளிகள் நாள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் நாள் அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காலத்தால் கைவிடப்பட்டவர்களாக, நிம்மதி வேண்டிச் சாய்வதற்குத் தோள்களைத் தேடுபவர்களாக மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து வருகிறார்கள்.
“என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியாவிடினும், என்னாலும் சிலவற்றை செய்ய முடியும்” என்று மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் வாழ்ந்து காட்டியனார், மாற்றுத் திறனாளிகளின் விடிவெள்ளி ஹெலன் கெல்லர்.
சாதிக்கப் பிறந்த மாற்றுத் திறனாளிகள் சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ்வதற்கு, அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அவசியம் குறித்தான விழிப்புணர்வை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு, உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மக்கள் மன்றம் என்ற அமைப்பை நிறுவி, சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு, திருப்பதி தேவஸ்தானம் பாலாஜி மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் ஜெகதீஷ் அவர்கள் மூலமாக அறுவைச் சிகிச்சை செய்து, மருத்துவக் கருவிகளை வழங்கி, மறுவாழ்வுப் பணிகளை மனநிறைவுடன் செய்தேன்.
மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க அனைத்து நிலைகளிலும் உள்ள மக்கள் தோள் கொடுத்துத் துணை இருப்போம்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இனிய மாற்றுத் திறனாளிகள் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
02.12.2023