மண் அரிப்பு மற்றும் நீரோட்டம் குறித்து தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா? வைகோ கேள்விக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் பதில்
மண் அரிப்பு மற்றும் நீரோட்டம் குறித்து
தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா?
வைகோ கேள்விக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் பதில்
கேள்வி எண்.1464
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள், மண் அரிப்பு மற்றும் நீரோட்டம் குறித்து தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா? என்று எழுப்பிய கேள்விக்கு இந்திய வேளாண்மைத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அளித்த பதில் வருமாறு:-
(அ) இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) தில்லி, மண் அரிப்பு, மழைப்பொழிவு, மண்ணில் ஊடுருவுதல் மற்றும் நீரின் ஓட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தேசிய அளவிலான ஆய்வு நடத்தி, அறிக்கை அறித்திருக்கிறதா?
(ஆ) திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அமைச்சகம் அறிக்கையை ஆய்வு செய்ததா?
(இ) தேசிய மண் பாதுகாப்புத் திட்டம், நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் (NMSA) ஒரு பகுதியாகத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதா;
(ஈ) அப்படியானால், அதன் விவரங்கள்;
(உ) இல்லையெனில், மண் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் எந்த வகையில் திட்டமிட்டுள்ளது, அதன் விவரங்கள்?
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா பதில்:
(அ) மற்றும் (ஆ): ஆம், ஐஐடி டெல்லி, மண்ணின் துகள்களின் பண்புகளின் அடிப்படையில் மண் அரிப்புக்கான தேசிய அளவிலான ஆய்வை நடத்தியது. அதாவது, மண்ணின் அமைப்பு உட்பட, மண்ணின் கரிம கார்பன் சதவீதம், மண் கட்டமைப்பு மற்றும் மண் ஊடுருவல் உள்ளிட்ட ஒரு ஆய்வு அறிக்கையை ஒரு இதழில் வெளியிட்டது.
இந்த ஆராய்ச்சி அறிக்கை, இந்தியாவில் மண் அரிப்பு பற்றிய விரிவான புரிதலுக்கு உதவுகிறது. மேலும், மண் அரிப்பு தொடர்பாக எதிர்காலத்தில் திட்டமிடுவதற்கு பயன்படுத்தலாம். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் – இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம் டேராடூன், நாட்டில் மண் அரிப்பு குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான முக்கிய நிறுவனம் ஆகும். மண் மற்றும் நீர் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு வழக்கமான பயிற்சிகளை வழங்குவதிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
(இ) முதல் (உ): நிலையான பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது. நில வளங்கள் துறை, ஊரக வளர்ச்சி அமைச்சகம் 2015-16 முதல் பாழடைந்த நிலங்களை மேம்படுத்துவதற்காக பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தின் மூலம் நீர்நிலை மேம்பாட்டுக் கூறுகளை செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் 1.0 இன் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, 2015-16 முதல் 2021-22 வரை, தோராயமாக 6.56 லட்சம் நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன அல்லது புத்துயிர் பெற்றுள்ளன. கூடுதலாக 14.54 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு பாதுகாப்பு பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 31.94 லட்சம். திட்டத்தின் 2.0 தொடர்ச்சியாக 15 டிசம்பர் 2021 அன்று அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா 2.0 திட்டத்தின்படி, 2022-23 மற்றும் 2023-24 நிதி ஆண்டுகளில் (1வது காலாண்டு வரை), தோராயமாக 0.75 லட்சம் நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 0.57 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு பாதுகாப்பு பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பயனடைந்த விவசாயிகள் எண்ணிக்கை சுமார் 4.30 லட்சம் ஆகும்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
19.12.2023