மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை ஏற்பாட்டில் அமைச்சர்கள் சிவகாசியில் தொடங்கி வைத்தனர்
குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டில் அமைச்சர்கள் சிவகாசியில் தொடங்கி வைத்தனர்.
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியில் மதிமுக சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் பணி திட்டமிடப்பட்டது. இந்நிகழ்வை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் துரை வைகோ உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
சீமைக்கருவேல மரங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து வைத்து தொடர்ந்து போராடியவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. சீமைகருவேலம் மரங்களை அகற்ற நீதிமன்றத்தின் மூலம் உத்தரவைப் பெற்று சீமைகருவேலங்களை அகற்றும் பணியினை மேற்கொண்டு வந்தார் வைகோ. அதே வழியில் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் துரை வைகோ குறுங்காடு அமைக்கும் திட்டத்திற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கி வைத்தார்
கந்தகபூமி என அழைக்கப்படும் சிவகாசியில் விஸ்வவனம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போன நீர்நிலையை மீட்டு மீண்டும் தண்ணீரைச் சேமிக்க வழிவகை செய்தனர். இவ்வமைப்பை பற்றிக் கேள்விப்பட்ட துரை வைகோ அவர்களை அழைத்துப் பாராட்டி மேற்கொண்டு உதவிகள் தேவைப்படுமாயின் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் ஆக்கிரமைப்புகளாலும், குப்பைகளை கொட்டி வீண்டிக்கப்பட்டு வருவதாகவும் தங்களிடம் கொடுத்தால் மரங்களை நட்டு பராமரிப்போம் என்றும் விஸ்வவனம் அமைப்பினர் தெரிவித்தனர். துரிதகதியில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார் துரை வைகோ. விஸ்வவனம் அமைப்பை அறக்கட்டளையாக மாற்ற உதவி செய்து, துறை சார்ந்த அமைச்சர் சேகர்பாபுவை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தார். மதிமுகவினர் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அங்கிருந்த ஆக்கிரமிப்புகள், குப்பைகள் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு சொட்டுநீர் பாசன வசதியும் செய்யபட்டுள்ளது. இப்படிச் செப்பனிடப்பட்ட இடத்தில் தான் இன்று மியாவாக்கி முறையில் குறுங்காடு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய துரை வைகோ, நமக்கு ஓர் ஊர் பிடிக்கவில்லை என்றால் வேறு ஊருக்கு மாறிவிடலாம், நாம் வசிக்கும் மாவட்டம் பிடிக்கவில்லை என்றால் வேறு மாவட்டத்திற்கு மாறிவிடலாம், ஏன் நாடு விட்டு நாடு கூட மாறிவிடலாம். ஆனால் நாம் வாழுகின்ற இந்தப் பூமியை விட்டு வேறு எங்கும் சென்று வாழ முடியாது என்று தெரிவித்தார். பூமித் தாயை காக்க வேண்டியது ஒவ்வொரு நபரின் கடமை என்ற துரை வைகோ எந்தவித அதிகாரமிக்க பதவி இல்லாமல் தன்னார்வலர்களுடன் இந்தப் பணியை தன்னால் செய்ய முடியும் என்றால் அனைவராலும் இது சாத்தியமே என்றார்.
ஒரு இலட்சம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடத் திட்டப்பட்டுள்ள நிலையில் முற்கட்டமாக ஆயிரத்து 500 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டன. நிகழ்ச்சியில் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன்,சதன் திருமலைக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.