முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / காவிரி நீர் விவகாரம்: தமிழக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திமுக கருத்து!

காவிரி நீர் விவகாரம்: தமிழக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திமுக கருத்து!

July 16, 2024 by Admin in அறிக்கைகள்

காவிரி நீர் விவகாரம்:
தமிழக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திமுக கருத்து!

காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இன்று 16.07.2024 சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வாசுதேவநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன்திருமலைக்குமார், மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன் வைக்கப்பட்ட கருத்துகள்;

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-ஆவது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது தமிழக அரசின் தரப்பில், “தற்போது மேட்டூர் அணையில் 12.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளிலும் 27.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. அங்கு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஜூன் 24-ஆம் தேதிவரை 4 அணைகளுக்கும் 7.236 டிஎம்சி நீர் வந்துள்ளது.

இந்நிலையில், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு ஜூன் 24-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 7.352 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி வரை 1.985 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் 5.367 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது. இதேபோல ஜூலை மாதத்தில் கர்நாடகா 31.24 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்.

கர்நாடக அரசு முறையாக காவிரி நீரை திறந்துவிடாததால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி ஜூன் மாதத்தில் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி நீரையும், ஜூலை மாதத்தின் 31.24 டிஎம்சி நீரையும் தமிழகத்துக்கு வழங்குவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும். இரு மாநிலங்களின் நீர் இருப்பு மற்றும் தேவை குறித்து இரு மாநில அதிகாரிகளையும் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிக்கிறேன்” எனக்கூறி, கூட்டத்தை ஒத்திவைத்தார்.

டெல்லியில் ஜூலை- 11 இல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடக அரசு தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ஆம் தேதி வரை திறந்துவிட வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையை அலட்சியப்படுத்திவிட்டு, தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவது குறித்து முடிவு எடுப்பதற்காக ஜூலை-12 ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா அவசரமாக அமைச்சரவைக் கூட்டினார்.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு சித்தராமையா செய்தியாளர்களிடம் “காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீரை திறந்துவிடுவதில்லை என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், நிகழாண்டில் 28 சதவீதம் குறைவாக மழை பொழிந்துள்ளது.

ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.

நீர்ப்பாசன ஆண்டு கணக்குப்படி, கர்நாடகா அரசு, தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 177.24 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு 81 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 96 டிஎம்சி தண்ணீர் நிலுவை வைத்துள்ளது.

நடப்பாண்டில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 9 டிஎம்சி-யும், ஜூலை மாதத்திற்கு 31 டிஎம்சி-யும், ஆகஸ்ட் மாதத்திற்கு 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். கடந்த ஜூன் 1-ஆம்தேதி முதல் தற்போதுவரை 20 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இதுவரை 4.89 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய நான்கு அணைகளிலும் முழு கொள்ளளவு நீர் இருப்பு உள்ளபோதும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி உரிமை நீரை வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறுவது அடாவடித் தனமானது; கண்டனத்துக்குரியது.

வறட்சி காலம், மற்றும் மழைக் காலங்களில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.

இதன் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரியில் நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவுகளை ஏற்காமல் அலட்சியப்படுத்தி வருவதால் தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்தி தமிழ்நாட்டிற்கு நீரைத் திறக்க கர்நாடக மாநிலத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு கர்நாடக மாநிலத்தின் அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் மிக முக்கியமாக நாம் உடனடி கவனம் செலுத்த வேண்டியது மேகேதாட்டு அணைப்பிரச்சனை ஆகும்.

கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா மாநில அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசும் போது,

“காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேகதாது அணையை கட்ட ஒரு தனி மண்டலக் குழு, இரண்டுத் துணை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது”

என்று தெரிவித்து இருக்கிறார்.

கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதாகும்.

காவிரியில் நீரைத் தடுத்து, 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 67.14 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு அணையைக் கட்டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதை அனுமதித்தால் தமிழகத்தின் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்.

கடந்த 48 ஆண்டுகளில் 15.87 லட்சம் ஹெட்டேர் நிலம் சாகுபடி பரப்பை நாம் இழந்துள்ளோம். ஆனால் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 38.25 இலட்சம் ஹெக்டேராக அதிகரித்துவிட்டது.

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கர்நாடகா, மீண்டும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், திட்டத்தைச் செயற்படுத்த குழுக்கள் அமைத்துள்ளதாக முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசை மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
16.07.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
தினமலர் இட்டுக்கட்டிய பொய் செய்தி! வைகோ கண்டனம்
Next Post
சங்கொலி 26.07.2024

Related News

சங்கொலி 04.09.2026
August 28, 2026 by Admin
சங்கொலி 28.08.2026
August 22, 2026 by Admin
சங்கொலி 21.08.2026
August 22, 2026 by Admin