கலைமாமணி வீ.கே.டி. பாலன் மறைவு! வைகோ இரங்கல்
கலைமாமணி வீ.கே.டி. பாலன் மறைவு!
வைகோ இரங்கல்
வீ.கே.டி.பாலன் என்று நம் அனைவராலும் அழைக்கப்பட்ட வீரசங்கிலி கண்ணையா தனபாலன் அவர்கள் தன் எழுபதாம் வயதில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆராத்துயரமும் அடைந்தேன்.
என் மீது அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்டவர், மறுமலர்ச்சி தி.மு.க. உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்றும், தமிழ் ஈழம் மலர வேண்டும் என்றும் பெரிதும் ஆர்வம் காட்டியவர் வீ.கே.டி.பாலன்.
இளம் வயதில் தான் பிறந்த திருச்செந்தூரிலிருந்து சென்னை மாநகரில் அடியெடுத்து வைத்து, பசி; பட்டினி; வறுமை ஆகியவைகளோடு போராடி, தன்னுடைய அயராத உழைப்பினால் ‘மதுரா’ குழும நிறுவனங்களின் தலைவராக எழுந்து நின்றவர் வீ.கே.டி. பாலன்.
சென்னை எழும்பூரில் உள்ள மதுரா டிராவல்ஸ் எனும் அவருடையை நிறுவனம் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வழிகாட்டுதலையும், உதவியையும் 25 ஆண்டுகளாக தொடர்ந்து அளித்து வருகிறது.
எட்டாம் வகுப்பு வரை படித்திருந்த இவர், பல்கலைக் கழக இளைஞர்களுக்கும் பயனளிக்கும் சிறந்த வழிகாட்டுதல்களையும், விமான போக்குவரத்து சார்ந்த கல்வி, தொழில்நுட்பம் ஆகியவைகளையும் வழங்கி வந்த பெருமைக்குரியவர்.
‘சொல்லத் துடிக்குது மனசு’ என்ற இவரின் நூல் அனைவரும் முன்னேற்றம் காண உதவிடும் வாழ்வியல் நூலாகும். இதுதவிர, இவரால் தொகுக்கப்பட்ட தமிழ்நாடு, கேரளா சுற்றுலா வழிகாட்டி நூல்கள், சுற்றுலா பயணிகளுக்கு பெரிதும் உதவிக் கொண்டிருக்கிறது.
ஆறு ஆண்டுகளாக, பொதிகை தொலைக்காட்சியில் இவர் இயக்கிய ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ என்னும் தொலைக்காட்சி தொடரும், மக்கள் தொலைக்காட்சியில் இவரின் நெறி ஆளுகையில் ஒளிபரப்பான ‘இவர்கள்’ எனும் தொலைக்காட்சி தொடரும் அனைவருக்கும் பெரிதும் பயன் தந்தது. இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரின் வளர்ச்சியில் மட்டும் அல்லாமல், சமுதாயத்தில் புறக்கணித்து வைக்கப்பட்டிருந்த திருநங்கைகளின் வாழ்க்கையிலும் வளம் காண அவர்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை வெளிஉலகுக்குக் கொண்டு வந்த மனிதநேயத்தின் அடையாளம்தான் வீ.கே.டி. பாலன்!
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு கலைமாமணி விருது அளித்து பாராட்டியது.
இவ்வாறு பல்துறை விற்பன்னராக, மனிதநேய மாண்பாளராக, சுற்றுலா துறை வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவராக ஒளிவீசி திகழ்ந்த வீ.கே.டி. பாலன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயரில் மூழ்கியுள்ள அவரின் மனைவி சுசீலா, மகன் ஸ்ரீகரன், மகள் சரண்யா ஆகியோருக்கும், மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை – 8
12.11.2024